மூன்றாவது மாடியிலிருந்து என்றாவது நீங்கள் வீட்டுக்குவெளியே, சன்னல்வழியே எட்டிப்பார்த்ததுண்டா? பார்த்ததில்லையென்றால் உடனே பாருங்கள்.
நம் அலங்கோல வாழ்க்கையின் கடிவாளம் கட்டப்பட்ட ஓட்டத்தில் பார்வைக்கப்பால் என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதை நாம் பலமுறை கண்டுகொள்வதில்லை. இந்த பதிவு அப்படி கண்டுகொள்ளப்படாமலிருக்கும் சில நிகழ்வுகளைப் பற்றிய திறனாய்வை உள்ளடக்கியதே.
இமான் அண்ணாச்சி, "டேபிள் மேட் பக்கத்து வீட்டில் இருக்கிறது, மேல் வீட்டில் இருக்கிறது, கீழ் வீட்டில் இருக்கிறது" என்று நாள்தோறும் பத்து தொலைக்காட்சிகளில் நூறு முறை காட்சியளித்துப் பரப்புரை செய்கிறார். அவர் அப்படி கூறுவதால் அந்த பன்னோக்கு மேசை விற்பனையானதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை ஆனால், அந்த விளம்பரம் இன்றைய நகர வாழ்வுச்சூழலை பெரிதாய் எதிரொலிக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாய் உணரமுடிகிறது.
அண்மையில் நேர்ந்த அனுபவமொன்று. நேற்றைய முன்னாள் இரவில் உறங்க ஆயத்தமாகும்போது, சரியாக கைபேசி ஒலித்தது. நண்பன் ஒருவனின் அழைப்பு அது. எங்கள் நட்பு வட்டாரத்தின் இன்னொரு நண்பரின் தாயார் இயற்கை எய்திவிட்ட செய்தியைக் கூறினான். பலநாட்கள் கடும் நோயவதியிலிருந்தவர், அன்று மாலை உயிரிழந்தார் என்றான். உடனே புறப்பட்டோம். வடபழநியிலிருந்து கிளம்பி நங்கநல்லூரிலிருக்கும் அந்த நண்பரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் வீட்டை அடையும்போது மணி 11.30யை எட்டியிருந்தது.
நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்த நங்கநல்லூர் சாலைகளெல்லாம் அமைதியின் விளிம்பில் அடங்கிக்கிடந்தது. எண்ணெயிடப்படாத ஊஞ்சலின் சங்கிலியோசையைப்போல் ஆங்காங்கே ஒரு சில வீடுகளில் ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒலிகள் மட்டும் அந்த அமைதியை பிளந்து பரவிக்கொண்டிருந்தது. பிற கட்டடங்களெல்லாம் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவே இருந்ததால் அவற்றிலிருந்து எந்த வித ஓசைகளும் எழவில்லை. அடுக்குமாடி ஓசைகள் உயரத்திலிருந்து சுரப்பதால் பெரும்பாலும் தரையைத் தொடுமுன் காற்றில்கரைந்துவிடுகின்றன.
நாங்கள் அங்கு செல்வதற்குமுன்பே எங்களின் சில நண்பர்கள் வந்திருந்தனர். அதுவும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புதான். அந்த குடியிருப்பின் தரைத்தளத்தில் அமைந்திருந்த அவர் உறவினர் வீட்டில்தான் அம்மாவை வைத்திருந்தனர். அவருடைய வீடு அதற்கெதிரே இருந்த வேறொரு அடுக்குமாடி குடியிருப்பின் உயர்த்தளங்களுள் ஒன்றில் அமைந்திருந்தது. அம்மாவை அன்றாடம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஏதுவாக இந்த வீட்டில் குடியமர்த்தி வைத்திருந்தார். அம்மாவை அவ்வளவு பொறுப்புடன் பார்த்துக்கொண்டார். பலமுறை பல நிகழ்வுகளையும் தவிர்த்திருக்கிறார்.
அப்படிப்பட்ட ஒருவரின் துக்கத்தில் தான் அந்த ஒலி எங்களுக்கு அப்போது கேட்டது. அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து வெளிவந்து காற்றில் கரையாமல் தரையைத்தொட்ட ஒலி. 'பனிவிழும் இரவு' பாடலின் ஒலி. அந்த குடியிருப்பு வளாகமே கேட்டு ரசிக்கவேண்டும் என்ற ஈகைப்பண்பில் யாரோ இசைக்க, மூன்றாவது மாடியிலிருந்த ஒரு வீட்டிலிருந்து அந்த இளையராஜா பாடல் கேட்டது. இரவு 10 மணிக்குமேல் ஒரு இளையராஜா பாடலைக்கேட்டு நான் வெறுத்தது என் வாழ்வில் அதுவே முதல்முறை. எங்களுக்கு முன் வந்திருந்த நண்பர்களிடம் கேட்டபோது, மாலையிலிருந்தே பாடல்கள் அந்த வீட்டிலிருந்து கேட்டுக்கொண்டிருப்பதாக கூறினர்.
ஏன் அவர்களுக்குத் தெரியாதா, கீழ் வீட்டில் அனைவரும் இழப்பிலிருப்பது? என்று கேட்டபோது, அவர்கள் கூறிய பதில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அந்த குடியிருப்பில் இருக்கும் எந்த வீட்டுக்காரரும் அப்போது வரை வந்து பார்க்கவில்லை என்றனர். சிலருக்கு தெரியாமல்கூட இருக்கலாம் என்றும் கூறினர். உடனே எங்களில் இருவர் மேலே சென்று அவரிடம் ஒலியளவைக் குறைக்கும்படி கேட்டனர். சூழ்நிலையை விளக்கி கோரிக்கை வைத்தபோது அவருக்கும் அது அதிர்ச்சியாகவே இருந்தது. கீழ் வீட்டில் ஒருவர் இறந்த செய்திகூட அறியாமல் இருந்திருந்தனர். எங்கோ அவர் நெஞ்சின் ஓரம் ஒதுங்கியிருந்த மனித உணர்வை எங்கள் கோரிக்கை வருடியதால் மன்னித்துவிடும்படி கேட்டுக்கொண்டு, பாடலை அமர்த்திவிட்டார்.
'இதுவே ஒரு கிராமமாக இருந்தால்...' என்று நான் எந்த ஒரு விளக்கத்தையும் துவக்க விரும்பவில்லை. சிற்றூர்களைப்போல நகரங்கள் இருப்பதில்லைதான். ஆனால், இங்கேவுள்ள குறையானது ஊரைப்பொறுத்து எழுந்ததல்ல. அது மனிதர்களைப்பொறுத்தது; அவர்களின் உணர்வுகளைப்பொறுத்தது.
வாழ்வுக்கான பிழைப்போட்டதில், பொருள் ஈட்டவும், பணம் சேர்க்கவும், அதை வங்கியில் சேமிக்கவும், நம் முழு முனைப்பையும் காட்டும் வேகத்தில், நாம் பணத்தை சேர்த்து வைக்கும் அதே வங்கிக்கணக்கில் உணர்வுகளையும் பத்திரப்படுத்திவிட்டு, வெளியில் வெறும் குருதியும் சதையுமாக நடமாடிக்கொண்டிருக்கிறோம். இரவு இளையராஜா பாடலைக்கேட்டு உணர்ச்சிகளின் முகடுகளில் அயர்ந்திருக்கும் நாம்தான் அடுத்த வீட்டின் இன்பத்துன்பங்களை இப்படி எளிதில் கடந்துவிடுகிறோம். எதிர்வீட்டுகாரர் பார்க்காதவண்ணம் வரவேற்பறையின் வாசற்கதவுகளை மூடிவிட்டு, முகம்தெரியாதவருக்காக முகநூலில் படுக்கையறையின் சன்னல் கதவுகளைத் திறந்தும் வைத்திருக்கிறோம். இப்படியிருக்கையில், பக்கத்து வீட்டில், எங்கோ தூரத்திலிருந்து வந்துகொண்டிருக்கும் உறவுகளுக்காக தன் இறுதி பயணத்தை தாமதப்படுத்திக்கொண்டு காத்திருக்கும் ஒரு இறந்த உடல் இருப்பதுமட்டுமல்ல, அந்த வீட்டில் டேபிள் மேட் இருப்பது கூட தெரியாமல்தான் இருக்கும். ஒருமுறை உங்கள் சன்னலுக்கு வெளியே எட்டிப்பாருங்கள், உங்கள் சுற்றம் உங்கள் உதவிக்காகவும் உணர்வுக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு உங்கள் கைகளை நீட்டுங்கள்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் நெருக்கமாகவும் அதில் வாழும் மனிதர்கள் இடைவெளியோடும் வாழ்வை நடத்தும் சூழலில், அவர்களுக்கிடையே உணர்வுகள் நுழைவது கடினம்தான். உணர்வுகளில்லாத இந்த அடுக்ககங்களில் விழும் கதிரொளியும் இருளாய்த்தான் மண்டும், எழும் இளையராஜா இசையும் இரைச்சலாகத்தான் ஒலிக்கும், அங்கே வீசும் தென்றலுக்கும் மூச்சுமுட்டும்.
- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, சனவரி 4, 2018.